BLISS

BLISS
MY LORD SOMASKANDAR

Saturday, November 12, 2011

உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த யோகமே!

உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த 
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு 
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

உம்பர்கட்கரசே - தேவர்களுக்கு அரசனே!

ஒழிவற நிறைந்த யோகமே - இல்லாத இடமே இல்லையெனும் படியாய், தோற்றம் இறுதி இல்லாமல், எக்காலத்தும், எங்கும், எல்லாப் பொருளினிலும் எல்லா உயிரினிலும் நிறைந்து கலந்தவனே

ஊத்தையேன் தனக்கு - கேவலமான, அழுக்கான எனக்கு

வம்பெனப் பழுத்து - வீம்பாய் அருள் புரிந்து, பழுக்கும் காலமில்லாத காலத்தில் சீக்கிரமே பழுத்த பழம் போல தகுதி இல்லாவிடினும் எனக்கு அருள் புரிந்து

என் குடி முழுதாண்டு - என் குடும்பம், குலம், உற்றார், உறவினர், எல்லோரையும், உன் அடிமையாய் ஆண்டு

வாழ்வு அற வாழ்வித்த - நிலையில்லா வாழ்வு போகும்படி நிலையான வாழ்வு அளித்த

மருந்தே - அமுதம் போன்றவனே

செம்பொருள் துணிவே - பெரியோர்களால் உண்மைப் பொருள் என்று முடிவு செய்யப் பட்ட பொருளே; செம்பொருளாகிய வேதங்களால் முழுமுதல் என முடிவு செய்யப்பட்டவனே

சீருடைக்கழலே - அழகிய பெருமையுடைய சிறந்த திருவடிகளை உடையவனே

செல்வமே - என் செல்வமே

சிவபெருமானே

எம் பொருட்டு - எங்கள் பொருட்டு

உன்னைச் சிக் எனப்பிடித்தேன் 

எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் எங்கே சென்று விட முடியும்?

தேவர்களின் அரசனே! நீர் எங்கும் எப்பொருளும் விடாமல், இல்லாத இடமே இல்லை எனும்படியாய், நீக்கமற நிறைந்துள்ளீர். உமக்கு தொடக்கம் என்றும் முடிவு என்றும் இல்லாமல் எங்கும் எப்போதும் நிறைந்துள்ளீர். நிலையில் மிகவும் குறைந்தவனான கேவலமான எனக்கு பழுக்கும் காலத்திற்கு முன்பே பழுத்த இனிய பழம் போல அருள் புரிந்தவரே. நீர் எம்மை மட்டும் அல்ல என் குலம், நண்பர், உறவினர் என அனைவரையும் உன் அடியார்களாய் ஆக்கிக் கொண்டீர். எங்கள் நிலையில்லாத வாழ்வை நீக்கி, என்றும் நிலைக்கும் பெருவாழ்வைக் கொடுத்த அமுதம் போன்றவரே! ஞானிகளாலும், வேதங்களாலும் மெய்ப்பொருள் என்று துணியப் பட்டவரே! நீரே எல்லோருக்கும் அழியாத பெருஞ்செல்வம். சிவபெருமானே! எங்கள் நலனுக்காக நான் உமது திருவடிகளைச் சிக் எனப் பிடித்தேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர். நான் உமது பாதங்களை பிடித்துவிட்டதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.

No comments:

Post a Comment