BLISS

BLISS
MY LORD SOMASKANDAR

Thursday, November 17, 2011

திருமழபாடி



                                                                                              திருமழபாடி
















239
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.1
240
கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.2
241
எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.3
242
பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.4
243
கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.5
244
நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.6
245
சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.7
246
வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.8
247
நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.9
248
ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
7.24.10